Search This Blog

Tuesday, May 3, 2011

குறுந்தொகைக் கதைகள்,அதுவரை பொறுத்திரு

அதுவரை பொறுத்திரு
-முனைவர். மா. தியாகராஜன்.
செல்வம் கொழிக்கும் சிங்கப்பூர்! அழகு செழிக்கும் எழில் நகர்! உலக மக்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் ஒய்யாரப் பேரூர்! வானத்து மேகங்களை முட்டி முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அடுக்கு மாடி வீடுகளின் அழகே அழகு தான்! அந்த அழகுக்கு அவனியில் எந்த அழகும் இணை இல்லைதான்!
அத்தகு அடுக்கு மாடி வீடுகளின் அணி வகுப்பு நடைபெறும் கிம் மோ சாலை!
இரண்டு அடுக்கு மாடி வீடுகள் - எதிர் எதிரே எழில் பொழிய நின்றன.
ஒன்றில், ஒரு மாடியில் கவிதா குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
எதிர் மாடி வீட்டில், கண்ணன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
கவிதாவும் கண்ணனும் சிட்டி ஹாலில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வந்தனர்.
ஆதலால், வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு இருவருமே ஒரே நேரத்தில் புறப்படுவது வழக்கம்! இது யதேச்சையாக நடப்பது.
ஒரு நாள்
கவிதா தன் மாடியை விட்டு இறங்கிக் கீழே வந்தாள்! கண்ணனும் அதே நேரத்தில் வந்தான்.
அவரவர் தனித்தனியே சாலையின் இரு பக்கங்களிலும் விரைந்து நடந்தனர்.

எம்.ஆர்.டி. தொடர் வண்டியை நோக்கி நடந்தனர்.
இடையே ஒரு சாலை!

வண்டிகள் தேனீக்களைப் போல் வரிசை வரிசையாக, விரைந்து விரைந்து சென்று கொண்டிருந்தன.

அவை கடந்து செல்லும் வரை இருவரும் நடைபாதையில் நின்றனர்.

சிவப்பு விளக்கு எரிந்தது.

குறுக்கே சென்ற வண்டிகளின் ஓட்டம் நின்றது.

அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் வேக வேகமாகச் சாலையைக் கடந்து எதிர் நடைபாதைக்குச் சென்று சேர்ந்தனர்; எம்.ஆர்.டி. வண்டி நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.
கண்ணன் முன்னே சென்றான்; கவிதா பின்னே சென்றாள்.
அடர்ந்த மரங்கள் செறிந்த பாதையைக் கடந்தன்ர்; படர்ந்த பசும்புல் தரையைக் கடந்தனர்; நிலையத்திற்குள் நுழைந்தனர்.
நகர்ந்து கொண்டிருந்த மின் படிகளில் நின்றனர்; படிகள் நகர்ந்து ஏறிக் கொண்டிருந்தன.

கண்ணன் தற்செயலாக கீழே திரும்பிப் பார்த்தான்; கவிதாவும் தற்செயலாக மேலே நிமிர்ந்து பார்த்தாள்.

இருவர் கண்களும் சந்தித்தன; இதழ்கள் புன்னகையால் மொழி பேசின. முதல் சந்திப்பாகையால் அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டனர்.
மேலே, சென்று சேர்ந்தனர்; வண்டியும் வந்தது!
இருவரும் விரைந்து வண்டிக்குள் நுழைந்தனர், நுழைந்த வேகத்தில் கண்ணனின் கை மீது கவிதாவின் கைபட்டுவிட்டது. ஆயிரம் காந்த ஊசிகள் சேர்ந்தால் எவ்வளவு காந்த சக்தியைப் பெறுமோ அந்தச் சக்தியை இருவர் மனங்களும் பெற்றன.

வண்டி ஒவ்வொரு நிறுத்தமாக நின்று நின்று சென்றது. இடையிடையே ஒருவரை ஒருவர் சிறுசிறு பார்வையால் பார்த்துக் கொண்டனர்; குறுநகை புரிந்து கொண்டனர்.
சிட்டி ஹால் நிறுத்தம்!
இருவரும் இறங்கினர்!

முன்பு முன் பின்னாய் நடந்து சென்றவர்கள் தற்பொழுது ஒன்றாக நடந்து சென்றனர்.

“உம்........! நீங்க எந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க?”

தான் படிக்கும் தனியார் கல்லூரி ஒன்றின் பெயரை கவிதா சொன்னாள்.

“நீங்க........?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“நானும் அங்க தான் படிக்கிறேன்!” என்றான் அவன்.

இப்படிச் சிறு சிறு வினாக்களைக் கேட்டு, விடைகளைப் பரிமாறிக் கொண்டே சென்றனர் - பெயர்கள், பெற்றோர்களைப் பற்றிய விவரங்கள், படிப்பு பற்றிய செய்திகள் போன்றவற்றைப் பரிமாறிக் கொண்டே சென்றனர்.

கல்லூரி வாயில்!

இருவரும் பிரிந்தனர் - பிரிய முடியாது பிரிந்தனர் - அவரவர் நண்பர்கள் அங்கங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் பிரிய வேண்டிய கட்டாயத்தால் பிரிந்தனர்.
மாலை! கல்லூரி முடிந்தது.
எம்.ஆர்.டி வாயில் வந்தனர்! இருவரும் இணைந்தனர்; தொடர் வண்டி ஏறி “போனா விஸ்டா” நிறுத்தம் வந்தனர்; பழைய பாதையில் வந்தனர்.
புல்தரை, மரச்சோலை, ஓய்வு நாற்காலிகள்!
“கவிதா! இங்குக் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லலாமா?” கண்ணனின் கோரிக்கை இது.
கவிதாவின் ஒப்புதலும் கிடைத்தது!
இருவரும் ஒரு பக்கமாய்ப் புல் தரையில் அமர்ந்தனர்; உலகையே மறந்தனர்.
இது அன்றாட நிகழ்ச்சியாய் மாறியது.
இந்தச் செய்தி மெல்ல மெல்ல எல்லாருக்கும் பரவத் தொடங்கியது.
மூன்றாண்டுகள் முடிந்து விட்டன!
“ஊரார் எல்லாரும் ஒரு விதமாய்ப் பேசுகிறார்களே! இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் துணியாமல் இருக்கின்றாரே!” என்று ஏக்கத்தால் இதயத்தில் சோகத்தைச் சுந்தவளாய் கலையிழந்த முகத்தோடு ஒரு நாள் நின்று கொண்டிருந்தாள் கவிதா. அது சமயம் அவளுடைய தோழி அல்லி மலர் அங்கே வந்தாள். அவள் நிலை உணர்ந்தாள்;
“கவிதா! உன் ஏக்கம் புரிகிறது! வீணாக நீ கவலைப்பட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளாதே! எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடியும்! அதோ பார்! நீண்டுயர்ந்த பனைமரங்கள்! அம்மரங்களின் அடிப்பகுதியில் கோடைக் காற்றானது அரும்பங்கொடி படர்ந்த மணற் குவியலைத் தூக்கி வந்து பரப்புகிறது! அம்மணல் மரத்தின் அடிப்பகுதியை மூடுகிறது. அதனால் அம்மரம் குறுகிக் குட்டையானது போல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட இடத்துக்குச் சொந்தக்காரன் நம் தலைவனாகிய கண்ணன். அவனைப் பற்றி நம் தாய்க்கும் தெரியும். உன் மனக்கவலைக்கும், உடல் மாற்றத்துக்கும் காரணம் தெய்வமாக இருக்கலாமோ என்று நினைத்த நம் தாய் வெறியாட வேலனை அழைத்து வந்து வெறியாடச் செய்த போது இதற்கெல்லாம் காரணம் கண்ணன் மீது நீ கொண்ட காதலே என்பதை நம் தாயும் அறிவாள்.
நம் உறவினர்க்கும் தாய் உண்மையைச் சொல்லி விட்டாள். எனவே பழி பற்றியோ இழிவு பற்றியோ நீ கவலைப்பட வேண்டாம்.
அவர் விரைவில் வருவார்; பெற்றோருடன் வருவார்; மணம் பேசுவார்; மணம் செய்து கொள்வார். அது வரைக்கும் பொறுத்திரு! என்று கூறித் தேற்றினாள் - ஆற்றினாள்.
“அதுவரல் அன்மையோ அரிதே; அவன்மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்குஆ கின்ற தோழி கானல்
ஆடுஆரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும்பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி, யாய் அறிந் தனளே” (குறுந்: 248)

No comments:

Post a Comment