Search This Blog

Saturday, May 28, 2011

"நீ பிரதமர் ஆவாய்!"

"நீ பிரதமர் ஆவாய்!"

மலேசியாவின் வரலாறு பல தமிழர்களுக்குத் தெரியாது.  சுருக்கமாகச் சொல்லப்போனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரிக நாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.  ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவிஜயம் என்னும் பேரரசின் முக்கிய பகுதியாக விளங்கியது. அதன் பின்னர் மஜாப்பாஹிட் என்னும் ஜாவானிய இந்துப் பேரரசின் கீழ் இருந்தது.  சுமாத்ராவிலிருந்து ஓடிவந்த பரமேஸ்வரா என்னும் மலாய் இந்து மன்னன் மலாயாவின் தென்பகுதியில் மலாக்கா என்னும் துறைமுகப் பட்டினத்தையும் ஒரு ராஜ்யத்தையும் தோற்றுவித்தான். பின்னர் முஸ்லிமாக மாறிய அந்த மன்னனின் கீழ் மலாக்கா 'சுல்த்தானேட்' என்னும் அந்தஸ்தைப் பெற்று அந்த வட்டாரத்தின் முக்கிய துறைமுக வாணிப மையமாகவும் மாறியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அது போர்த்துகீசியர்கள் வசமாகியது. அவர்களிடமிருந்து டச்சுக்காரர்களிடமும் கடைசியில் பிரிட்டிஷ்காரர்களிடமும் போய்ச் சேர்ந்தது.  1785-ஆம் ஆண்டு பினாங்குத் தீவில் கால் விரலூன்றிய பிரிட்டிஷ்காரர்கள் மலாயா முழுவதையும் போர்னியோத்தீவின் வடக்கு வடமேற்குப் பிரதேசங்களையும் பிடித்து ஆட்சி புரிந்தார்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியர்கள் பிடித்துக்கொண்டனர். 1945-இல் மீண்டும் பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினர்.  அப்போதிருந்து சுதந்திர உணர்வு மலாயர்களுக்கு அதிகரித்தது.  சுதந்திரம் கொடுத்துவிட்டுப்போக நினைத்த பிரிட்டிஷ்காரர்களுக்கு யாரிடம் கொடுத்து விட்டுப்போவது என்பது ஒரு பிரச்னையாகியது. 

அது ஒரு பெரிய கதை. 

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் கொண்ட முக்கூட்டுக் கட்சி அணியிடம் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி நாட்டை ஒப்படைத்தனர்.  சுதந்திர மலாயாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா.  அவர் ரிட்டயர் ஆகிய பின்னர் 'ஸ்டார்' என்னும் பத்திரிக்கையில் The Tunku Tapes என்னும் தொடர் ஒன்றை எழுதுவித்து வந்தார்.  அதில் ஓர் இடத்தில் கூறியிருந்ததாவது:

"என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்துவிட்டன. அவற்றைப் புறக்கணிக்கவோ, மறக்கவோ என்னால் முடியாது.  ஓர் இந்திய ஜோதிடரை நான் மறக்கவே முடியாது.  பகடைக்காய்களை உருட்டிப் பார்ப்பவர்.  1939-ஆம் ஆண்டில் நான் கூலிம் என்னும் ஊரில் மாவட்ட அதிகாரியாக இருந்தேன். 
அப்போது ஜப்பானியர்கள்கூட இன்னும் வரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி.  அப்போதுதான் அந்த ஜோதிடர் வந்தார்.  என்னைப் பார்த்துவிட்டு, "நீங்கள் ஒரு காலத்தில் மலாயாவின் முதல் பிரதம மந்திரியாக ஆவீர்கள்" என்று சொன்னார். அனைவரும் சிரித்தார்கள். நானும் சிரித்தேன். எப்படி ஒரு சாதாரண மாவட்ட அதிகாரி ஒரு நாட்டின் பிரதமராக முடியும்?  ஆனால் அவர் சொன்னார்: "இப்போது நீங்கள் சிரிப்பீர்கள். சிரியுங்கள். ஆனால் அதைத்தான் கிரகங்கள் காண்பிக்கின்றன."

இது 1939-இல் நடந்தது. 
1957-இல் நான் சுதந்திர மலாயா நாட்டின் முதல் பிரதம மந்திரியாகினேன்......."

No comments:

Post a Comment