Search This Blog

Wednesday, May 4, 2011

நம்பிக்கைதானே வாழ்க்கை!

நம்பிக்கைதானே வாழ்க்கை!
ஒரு காட்டில் இருந்த மூன்று மரங்கள் தங்களுடைய கனவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தன.
முதல் மரம் சொல்லியது: "ஒருநாள் நான் ஒரு அழகான மரப்பேழை ஆகவேண்டும். விலையுயர்ந்த பொருள்களையும் செல்வங்களையும் என்னுள் வைத்திருக்க வேண்டும்".
இரண்டாவது மரம் சொல்லியது: "நான் ஒரு பலமான பெரிய கப்பலாக வேண்டும். அரசர்களையும் ராணிகளையும் சீற்றம் மிகுந்த கடலிலும் கூட பாதுகாப்பாக சுமந்து செல்ல வேண்டும்".
மூன்றாவது மரம் சொல்லியது: "நான் இந்தக் காட்டிலேயே உயர்ந்த மரமாக வளர வேண்டும். விண்ணை முட்டும் என் உயரத்தைப் பார்த்து கடவளுக்கு அருகில் நான் இருப்பதாக எண்ண வேண்டும்"
சில காலம் கழித்து மரங்களை வெட்டுவதற்காக தச்சர்கள் வந்தார்கள்.
முதல் மரத்தின் அருகில் வந்தவர்கள் "இது நல்ல பலமாக இருக்கிறது அதனால் இதை பெட்டிகள் செய்யும் தச்சனிடம் விற்றுவிடலாம்" என்றனர். மரத்திற்கும் தான் நினைத்தவாறே பேழையாகப் போவதை எண்ணி மகிழ்ச்சி.
இரண்டாம் மரத்திடம் வந்தவர்கள் "இது கப்பல் செய்ய ஏதுவாக இருக்கும். எனவே துறைமுகத்தில் விற்று விடலாம்" என்ற முடிவுக்கு வந்தனர். தான் ஆசைப் பட்டவாறே பெரிய கப்பலாகப் போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்தது மரம்.
மூன்றாம் மரத்தைக் கண்டவர்கள் "இதற்கு பெரிதாக எந்தத் தேவையும் இல்லை அதனால் இதை கிடங்கில் போட்டு விடலாம்" என்று வெட்டிச் சென்றனர்.

தச்சனிடம் வந்த முதலாவது மரம், தீவனப் பெட்டியாக செய்யப்பட்டு, தொழுவத்தில் வைக்கோல் வைக்கப் பயன்படுத்தப்பட்டது. துறைமுகத்திற்கு கொண்டு சென்ற இரண்டாவது மரம் சிறு மீன்பிடி படகாக செய்யப்பட்டது. மூன்றாவது மரத்தை வெட்டி கிடங்கில் போட்டனர். இவ்வாறு மூன்று மரங்களின் கனவுகளும் தகர்க்கப்பட்டன.

காலம் சென்றது. மரங்களும் தங்களது கனவுகளை மறந்து விட்டன. ஒரு தொழுவத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர். அப்போது அந்த பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையை முதல் மரத்தால் செய்யப்பட்ட தீவனப் பெட்டியிலிருந்த வைக்கோலில் வைத்தனர். அந்த நிமிடமே முதல் மரம் உணர்ந்தது, 'செல்வங்களில் எல்லாம் பெரிய செல்வம் என்னுள் வைக்கப்பட்டு இருக்கிறது' என்று.

சில வருடங்கள் கழித்து இரண்டாவது மரத்திலான படகில் சில பேர் கடலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய புயல் வீசத் தொடங்கியது கண்டு தன் மேல் பயணிப்பவர்களை காப்பற்ற முடியாதே என்று அஞ்சியது. அப்போது படகில் இருந்த ஒருவர் புயலை நோக்கி "அமைதி" என்றார். உடனே கடல் சாந்தமானது. அப்போதே இரண்டாவது மரம் தெரிந்து கொண்டது அரசர்களுக்கெல்லாம் அரசனை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் என்று.

சில நாட்கள் கழித்து மூன்றாவது மரத்தை சுமந்து கொண்டு ஒருவர் வீதியிலே சென்றார். வழியில் நின்றவர்கள் அவரைப் பார்த்து ஏளனம் செய்தனர். ஒரு குன்றை அடைந்ததும் அவரை அந்த மரத்திலேயே ஆணியால் அறைந்து செங்குத்தாக நிறுத்தினார். மூன்று நாட்கள் கழித்து மூன்றாவது மரம் உணர்ந்தது கடவுளின் அருகிலேயே அது இருந்ததை. அதில் அறையைப்பட்டிருந்தவர் இயேசு கிறிஸ்து.

மூன்று மரங்களுக்கும் அவைகள் விரும்பிய வழியில் எதுவும் நடக்கவில்லை, ஆனால் விரும்பியது நடந்தது. வழி தான் வேறு. நமக்கும் அது போல் தான், நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் னால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
-கிறித்தவ சமயக் கதை.

No comments:

Post a Comment