Search This Blog

Thursday, May 5, 2011

ஆன்மீகவாதிகள் நகைச்சுவை

 ஆன்மீகவாதிகள் நகைச்சுவை
-டி.எஸ்.பத்மநாபன்.
பேயைப் பார்த்ததில்லை.
சுவாமி சின்மயானந்தா ஒருமுறை சென்னையில் கீத ஞான யக்ஞம் நடத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்தணர்கள் வசமிருந்த பலகோவில்கள் அவருக்கு இடம் கொடுக்க மறுத்தன. அப்போது அவரது சீடர் அவரிடம் ஓடி வந்தார். "ஒரு இசுலாம் இனத்தவர் தனது இடத்தைக் கொடுக்கிறேன்" என்று சொல்கிறார், "ஆனால்" என்று தயங்கியவாறே, "அந்த இடம் பேய் இருக்கும் இடமாம்" என்று சொன்னார்.
சுவாமி உடனே," அதனாலென்ன, நான் இன்னும் பேயைப் பார்த்ததே இல்லை. ஒரு நல்ல சந்தர்ப்பம்" என்றார்.
யாருக்கு யார் தரிசனம்?

ரமண மகரிஷி ஒருமுறை வழக்கம்போல அருணாச்சல மலையை வலம் வந்து கொண்டிருந்தார்.
அவரிடம் பற்றுதல் கொண்ட ஒருவர் அவர் பின்னாலேயே வேகமாக ஓடிவந்து ரமண மகரிஷியின் முன்னால் நின்று, "நான் உங்கள் தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்று நீங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்"என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
ரமண மகரிஷி உடனே, " நான் எங்கே தரிசனம் கொடுத்தேன்? நீங்கள்தானே என் முன்னால் வந்து நின்று எனக்கு தரிசனம் கொடுத்தீர்கள்" என்று சொன்னார்.
ஆசிக்கு எவ்வளவு தூரம்?
ஒருமுறை அமெரிக்க பக்தர்கள் சிலர் ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பின் வரிசையில் இருந்தார்கள்.
அவர்கள் மகரிஷியிடம் அவரது அருளைப் பெற முன்னால் வந்து அமரலாமா? என்று கேட்டார்கள்.

மகரிஷி, " நீங்கள் முன்னால் வந்து அமர்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனது அருள் தூரத்தைப் பொருத்தது அல்ல, நீங்கள் பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் என் ஆசி இருக்கும்." என்று சொன்னார்.
அருள் கிடைக்கக் கோர்ட்டுக்குப் போகலாமோ?
சில பக்தர்கள் மகரிஷியை அவர்கள் தலைமேல் அவரது கையை வைத்து ஆசீர்வதித்தால் பூரண அருள் கிடைக்கும்' என்று சொன்னார்கள்.
மகரிஷி உடனே," இது என்ன வேடிக்கையாய் இருக்கிறது- இன்னும் கொஞ்சம் போனால் என்னை அருள் தரச் சொல்லி பத்திரத்தில் எழுதி வாங்குவீர்கள் போலிருக்கிறது- அப்படி அருள் கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்குக் கூட என்னை இழுப்பீர்களோ என்னவோ" என்றார்.
நல்ல டாக்டரைப் பார்க்க...
சுவாமி தயானந்த சரஸ்வதி ஒருமுறை இந்தக் கதையைச் சொன்னார்.
சாகப் போகும் நிலையிலிருந்த மூன்று பேரிடம் டாக்டர் "அவர்களுடைய கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்.
அதற்கு முதலாமவன் சொன்னான், "தான் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் மன்னிப்புக் கேட்க விரும்புவதாக"
இரண்டாவதாக இருந்தவர் "தன்னுடைய குடும்பத்தவர்க்ள் அனைவரையும் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.
மூன்றாவது ஆளோ நான் வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.
கீதையைக் கேட்க ஒருவர்
படித்த பண்டிதர் ஒருவர் காஞ்சிபரமாச்சாரியாரிடம் தான் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார்.
சுவாமிகள் அவரிடம் அங்குள்ள கோவில் ஒன்றில் அவரால் பத்துநாட்கள் கீதை உபன்னியாசம் செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்தப்

பண்டிதரும் சம்மதிக்க உபன்னியாசம் நடந்தது. முதல் நாள் நல்ல கூட்டம் வந்தது.
இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று நாள் செல்லச் செல்லக் கூட்டமும் குறைந்து கொண்டே வந்தது.
அவர் பரமாச்சாரியாரிடம் ," என்ன ஊர் இது? முதல் நாள் 50பேர் வந்தார்கள். இரண்டாம் நாள் 25 பேர். பிறகோ இரண்டே பேர்தான் வந்தார்கள்- யாருக்குமே கீதையைக் கேட்க ஆசையில்லை போலிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டார்.
பரமாச்சாரியார் ஒரு புன்முறுவலுடன், " ஏன் வருத்தப் படுகிறீர்கள்? கண்ணன்

கீதையைச் சொன்ன போது அதைக் கேட்க ஒரே ஒருவர்தானே இருந்தார்" என்று சொன்னார்.

No comments:

Post a Comment