Search This Blog

Tuesday, May 3, 2011

குறத்தி மலைக் கள்வன்

குறத்தி மலைக் கள்வன்
-முனைவர். மா. தியாகராஜன்.
அது ஒரு மலைக் கிராமம்! சுற்றிலும் மலைகள்; அவற்றின் முகடுகளைச் சூழ்ந்து படரும் மேகக் கூட்டங்கள்; வளைந்து நெளிந்து ஓடும் வற்றாத ஆறுகள்; மணம் பரப்பும் மலர்கள் இனம் இனமாய்ப் பூத்துக் குலுங்கின்றன; வண்டினங்கள் அவற்றை வட்டமிட்டுப் பாடும் ரீங்கார ஓலி, வானத்தில் பறந்து திரியும் வகை வகையான பறவைகளின் பாட்டு ஒலி ஆகியன எங்கும் எதிரொலித்துக் கொண்டுள்ள வளமான கிராமம்! இயற்கைத் தேவதை இன்புற்று எழுந்தருளியிருக்கும் இனிய ஊர்!
மலர்விழி! அந்த மங்கையின் பெயர்!

அவள் ஒரு நாள் தினைப் புனம் காக்கச் சென்றாள் - உடன் தோழி தேன்மொழியும் சென்றாள். தினைகளைக் கொத்தித் தின்னத் திரண்டு வரும் குருவி இனங்களைக் கவண் மூலம் கல்லெறிந்து ஓட்டிப் புனத்தைக் காத்து நினறாள்.

அப்பொழுது அப்பக்கமாகக் காளை ஒருவன் வந்தான் - கண்ணன் அவன் பெயர். கன்னியைக் கண்டான் - நின்றான் - சிறிது நேரம் சேயிழையின் செயலைப் பார்த்து நின்றான். அதே சமயம் அவளும் அப்பக்கமாகத் திரும்பினாள் - காளையைக் கண்டாள். இருவரும் பார்த்தனர் - ஒருவர் கண்களை மற்றவர் கண்கள் கவ்வின - இதயங்கள் கலந்தன.
அது முதல் இருவருடைய சந்திப்புக்கும் அந்தத் தினைப் புனம் களம் ஆயிற்று.
பகல் எல்லாம் சந்திப்பு! இரவெல்லாம் பெருமூச்சு! இப்படியே நாள்கள் பல கழிந்தன!
ஒரு நாள்!
புனத்தை ஒட்டிப் புனல் ஓடை ஒன்று! மலர்விழியின் மடியிலே கண்ணன் - கண்ணனின் அணைப்பிலே மலர்விழி! - தினைப் புனமோ குருவிக் கூட்டங்களின் வேட்டைக்காடு!
இந்தச் சமயத்தில் தினைப்புனத்தைப் பார்க்கத் தந்தை அங்கே வந்தார்! தந்தை வருவதைத் தோழி குறிப்பாள் தெரிவித்தாள். மலர்விழியும் அதை உணர்ந்து ஓடையிலிருந்து ஓடோடி வந்தாள்!
ஆனால் அவளுடைய கலைந்த கூந்தல், கலைந்த ஆடை அகியவற்றைக் கண்டு ஓரளவு தந்தை ஊகித்துக் கொண்டார்.
மறுநாளிலிருந்து புனம் காக்கப் போக வேண்டாம் என்று தந்தை கட்டளையிட்டார். இதனால் பகல் பொழுதில் நடைபெற்ற சந்திப்பு நடைபெற்ற சந்திப்பு தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே தோழி தேன்மொழியின் துணையுடன் இரவு நேரங்களில் சந்திப்பு நடைபெற்றது.

மலர்விழியின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு தோட்டம்! அங்கே மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.

ஊரெல்லாம் உறங்கிய பிறகு கண்ணன் அங்கே மறைந்து மறைந்து வருவான். வீடெல்லாம் உறங்கிக் கிடக்க விழித்திருப்பாள் மலர்விழி மட்டும்.
தோட்டத்திற்குள்ளே வந்த கண்ணன் கல் ஒன்றை எடுப்பான் - மரம் ஒன்றின் மீது எறிவான் - கல்பட்ட உடனே கண் மூடி உறங்கிக் கொண்டிருக்கும் பறவையினங்கள் விழித்துக்கொள்ளும்; ஏதோ ஆபத்து என்று எண்ணி “கீச்கீச்” என்று அச்சத்தால் குரல் எழுப்பும். குருவிகளின் குரல் கேட்டு மலர்விழி, கண்ணன் அங்கே வந்துள்ளதை உணர்ந்து, மெல்ல எழுந்து, மெதுவாகக் கதவைத் திறந்து, பையவே அடி வைத்து நடந்து தோட்டத்திற்குச் செல்வாள். அங்கே அவர்கள் சந்திப்பு! விடியும் வரை சந்திப்பு! தோழி துணை புரிவாள்!
ஒரு நாள்!

கண்ணன் வந்தான் - கல்லை எடுத்தான் - கிணற்றிலே எறிந்தான் சப்தம்! கேட்டாள் மலர்விழி; கிளர்ந்து; எழுந்தாள்; வந்தாள்; கண்ணனின் அணைப்பிலே சாய்ந்தாள்.
அப்பொழுது...?
தற்செயலாக விழித்தார் தந்தை! கிணற்றடியில் சப்தம் கேட்டு வெளியே வந்தார்! தந்தை வெளியே வருவதைத் தோழி தெரிவிக்க, விரைந்து மலர்விழி வீட்டிற்குள்ளே வந்துவிட்டாள் - தந்தையிடம் ஏதோ சாக்குச் சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
ஆனால், தந்தையோ அவள் நிலை கண்டு உண்மையை உணர்ந்து கொண்டார். மலர்விழி வீட்டை விட்டும் வெளியே செல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார் - கட்டுப்பாடு விதித்தார் - வீட்டிற்குள்ளேயே வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தார். அதனால் இரவுச் சந்திப்பும் தடுக்கப்பட்டு விட்டது - தலைவி இல்லத்திற்குள்ளே முடக்கி வைக்கப்பட்டாள் இற்செறிக்கப்பட்டாள்.

பகலிலும் இரவிலும் சந்திக்க முடியாதபடி தடுக்கப்பட்டாள். அதனால் துயரத்திலே தோய்ந்தாள்; உண்பது கிடையாது - உறங்குவது கிடையாது. அதன் காரணமாய் நாளுக்கு நாள் உடல் மெலிந்தாள்.

மலர்விழியின் மேனி மெலிவைக் கண்டனர் பெற்றோர். அதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? என்று பலவாறு சிந்தித்தனர்.

நோய் என்று கருதி, தேர்ந்த மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் செய்தனர். ஆனால் குணமாகவில்லை.

சாமி இறங்கி ஆடும் அருளாளனை - வெறியாடும் வேலனை அழைத்தார்கள்; வெறியாடச் செய்தார்கள். வெறியாடிய வேலனும் பல்வகைக் காரணங்களையும் கூறினான். அவன் சொன்னபடி அனைத்தையும் செய்தனர். பலன் தான் ஒன்றும் இல்லை.

இறுதியாகக் கட்டுவச்சி என்பவளை அழைத்தனர். கட்டுவச்சி என்பவள் மலையில் வாழும் குறத்தி ஆவாள் - குறி சொல்பவள் - குறி பார்த்துப் பலன் சொல்பவள் ஆவாள்.

கட்டுவச்சி வந்தாள் - அமர்ந்தாள். அவள் முன்னே மலர்விழியை அழைத்து வந்து அமர்ந்தனர்.

“அம்மா! நன்றாய்க் குறி பார்த்துச் சொல்ல வேண்டும்! இவள் நோய்க்கான காரணம் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்!” என்று கேட்டனர் பெற்றோர்.

இதைப் பார்த்த தோழி தேன்மொழி பரிதாபத்தோடு அவர்களை. உண்மை நோய் புரியாமல் இப்படி மயங்குகிறார்களே என இரக்கத்தோடு பார்த்தாள் - ஏதேதோ செய்கிறார்களே என்று கருணையோடு பார்த்தாள்.

கட்டுவச்சியை நோக்கிய பெற்றோர்கள் தொடர்ந்து “அம்மா! அவளுடைய எதிர்காலத்தைப் பற்றியும் நன்றாகச் சொல்! அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்! மாப்பிள்ளை எப்படி இருப்பான்? நாங்கள் நினைக்கும் பையனுக்கு மணம் முடித்துக் கொடுக்கலாமா?” என்று கேட்டனர்.

இதைக் கேட்ட தோழி சற்றுப் பதறினாள். மலர்விழியை வேறொரு மாப்பிள்ளைக்கு மணம் முடித்துக் கொடுக்க தீர்மானித்து விட்டார்களே என்று மயங்கினாள் - ஒருவேளை மலர்விழியினுடைய காதல் தோல்வி அடைந்துவிடுமோ என்று கலங்கினாள் - “இனியும் காலம் தாழ்த்துதல் கூடாது; உண்மையை உணர்த்திவிட வேண்டும்!” என்று முடிவு செய்தாள். அடுத்த நொடி..? எப்படி உணர்த்துவது? என்று அறியாது திகைத்தாள். தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.
கட்டுவச்சியைப் பார்த்தாள் - அவளோ முதியவள்!
அவளுடைய கூந்தலைப் பார்த்தாள் - அடர்ந்து இருந்தது; அலை அலையாய்ச் சுருண்டு கிடந்தது; வெண்மையான சங்குகளைக் கோர்த்தால் எப்படி இருக்குமோ அதைப்போல் நரைத்து இருந்தது.
அவள் குறி சொல்லத் தொடங்கினாள். ஒரு கட்டுவச்சி குறி சொல்லத் தொடங்கும் முன் அவளுடைய மலையின் பெயரைக் கூறி, அதன் வளத்தைப் பாடி முடித்த பின்னரே குறி சொல்வது வழக்கம்.

அதைப் போலவே, இங்கு குறி சொல்ல அந்தக் கட்டுவச்சியும் தன் மலையின் பெயரைச் சொன்னாள்.

தோழி அப்பெயரைக் கேட்டாள்; துள்ளிக் குதித்து எழுந்தாள்; கட்டுவச்சியைக் களிப்புடன் பார்த்தாள்; முகம் மலர்ந்தாள்; புன்னகை பூத்தாள்.

“குறத்தி மகளே! குறத்தி மகளே! குறி சொல்லும் குறத்தி மகளே! குறவர் குலக் கொழுந்தே! உன் குலத் தெய்வங்களை உரக்கக் கூவி அழைக்கும் குறத்தியே! அவர்களிடம் கேட்டுக் குறி சொல்லும் அகவன் மகளே! குறி கேட்பவர்களின் குலதெய்வங்களையும் கூவி அழைத்துக் குறி சொல்லும் அகவன் மகளே! அகவன் மகளே!
கூறு! இன்னொரு முறை கூறு! இப்பொழுது கூறினாயே ஒரு மலையின் பெயரை - அந்தப் பெயரை இன்றும் ஒரு முறை கூறு! அப்பெயரைக் கேட்கக் கேட்க இதயம் எல்லாம் இனிக்கிறதே! எங்கே கூறு! அப்பெயர் எனக்கு இன்பத்தைத் தருகிறது. என் தலைவியாகிய இவளுக்கும் இனிமையைத் தருகிறது. எனவே, அந்த இனிய மலையின் பெயரை இன்னும் ஒரு முறை கூறு! கூறு! கூறிக் கொண்டே இரு!” என்று மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கரை புரண்டு ஓடக் கூறிக் குதித்தாள் களிப்பால்.

தோழியின் உரையையும் உவகையையும் பெற்றோரும் சுற்றி இருந்த மற்றோரும் புரிந்து கொண்டனர் - தலைவியின் நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டனர் - குறத்தி குறித்த குன்றத்தில் வாழும் காளை ஒருவனே அவள் காதலன் என்பதை உணர்ந்து கொண்டனர் - அக்காதலே மலர்விழியின் நோய்க்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டனர். 
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்றும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!”
 (குறுந்தொகை 23 - ஒளவை)

No comments:

Post a Comment