Search This Blog

Thursday, May 12, 2011

"தாயே உன்னை.....!"

 ஆறாவது நாளாய், இரவு பகல் பாராமல் கடவுள் தாயைப் படைத்துக் கொண்டிருந்தார்.

by Keyem Dharmalingam on Wednesday, 11 May 2011 at 22:44
 "தாயே உன்னை.....!"  by Magendran Natarajan on Saturday, May 7, 2011 at 9:43pm

ஆறாவது நாளாய், இரவு பகல் பாராமல் கடவுள் தாயைப் படைத்துக் கொண்டிருந்தார்.  அவர் படுகின்ற பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு தேவதை, சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவரை அணுகி, "எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு இதனை உருவாக்குறீங்க?" எனக் கேட்டது.
"இதற்காக நான் தயாரித்து வைத்திருக்கும் படிவத்தைப் படிக்கலியா நீ?

முழுவதுமாக தூய்மைப்படுத்திக் கொள்பவளாக, அதே சமயம் பிளாஸ்டிக்கால் செய்யப்படாதவளாக இருக்கணும். கிட்டத்தட்ட 200 அசையும் உறுப்புகளைக் கொண்டவளாக இருக்கணும். வெறும் காப்பித்தண்ணியையும், மீதமான உணவையும் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழணும். ஒரே நேரத்தில் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது தன் மடியில் வைத்துக் கொள்ளும்படி இருக்கணும். எழுந்திருக்கும்போது அந்த மடி[அடிவயிறு] மறைந்து அழகாகத் தெரியணும். அவள் கொடுக்கும் ஒரு முத்தத்திலேயே ஒரு சின்ன சிராய்ப்பிலிருந்து, நொறுங்கிப்போன இதயம் வரை அனைத்தையும் குணமாக்கணும். இவையெல்லாம் தவிர, இவளுக்கு ஆறு ஜோடிக் கைகளும் இருக்கணும். அதான் இவ்ளோ கவனமா வேலை செய்யறேன்." என்றார் கடவுள்.

"என்னது? ஆறு ஜோடிக் கைகளா? நடக்கவே நடக்காது!" என்றது தேவதை.

"அட, அதெல்லாம் கூட சமாளிச்சிரலாம். இந்த மூணு ஜோடிக் கண்ணுங்களை வைக்கணுமே, அதுக்குத்தான் நேரம் பிடிக்குது" எனச் சிரித்தார் கடவுள்.

"அது வேறயா? ஆமா, இதெல்லாம் ஒரு சாதாரண வடிவான தாயிடமா?" என்றது தேவதை.

ஆம் என்னும் விதமாகத் தலையை ஆட்டியபடியே, " ஆமாம். மூடிய கதவுக்கு வெளியே நின்றுகொண்டே, உள்ளே என்ன நடக்குது எனத் தெரிந்துகொண்டே, 'உள்ளே என்ன பண்றீங்க?'ன்னு கேக்கறதுக்கு ஒரு ஜோடி. இவளுக்கு என்ன தெரியும்னு மத்தவங்கல்லாம் நினைச்சாலும், அடுத்து என்ன பண்ணணும்ன்றதைப் பாக்கறதுக்கு தலைக்குப் பின்னாடி ஒரு ஜோடி. ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி பாக்கறதுக்கு முகத்துல ஒரு ஜோடி. தப்பு பண்ற பிள்ளையைப் பார்த்து, 'எல்லாம் எனக்குத் தெரியுண்டா/[டீ]; இருந்தாலும் நான் உன்னை ரொம்பவே நேசிக்கறேன்னு சொல்லாம சொல்றதுக்கு அது! இப்பிடி மூணு ஜோடி தயார் பண்ணணும். அதான் சிரமம்" என்றார் கடவுள்.
"இது ரொம்பவே கஷ்டமான வேலை. கொஞ்சம் ஓய்வு எடுத்துகிட்டு நாளைக்கு மிச்சம் வேலையைப் பண்ணுங்க" என்றது பரிவுடன் தேவதை.

"முடியலியே! நான் படைச்சதுலியே எனக்கு மிகவும் பிடிச்ச படைப்பு இதான்.தனக்கு ஒரு நோய் வந்தாலும் யார்கிட்டயும் சொல்லாம, தானே தன்னை குணப்படுத்திக்குவா இவள். ஒரு ஆழாக்கு அரிசியுல ஒன்பது பேருக்கு உணவு சமைச்சு வக்கணையாப் பரிமாறிட்டு, தான் பட்டினி கிடப்பா. வம்பு பண்ற ஒன்பது வயதுக் குழந்தையை குளிப்பாட்டிவிடுவாள்" எனக் கடவுள் பதிலிறுத்தார். 

ஆச்சரியத்துடன் அந்த வடிவத்தை நெருங்கி லேசாகத் தொட்டுப் பார்த்தது அந்தத் தேவதை. " ஆனா, இவளை இவ்வளவு மென்மையாப் படைச்சிருக்கீங்களே. வேலைக்காவுமா?' எனக் கூவியது.  "பாக்கறதுக்குத்தான் மென்மை. ஆனால் இவளைப் போல கடினமான படைப்பே கிடையாதுன்னு சொல்லுவேன். எந்த அளவுக்கு தாங்குவா, எவ்ளோ சாதனை செஞ்சு காட்டுவான்னு உனக்குத் தெரியாது' எனப் பெருமையுடன் சொன்னார் கடவுள்.  "அது சரி, இவளுக்கு சிந்திக்கத் தெரியுமா?" எனச் சந்தேகத்துடன் கேட்டது தேவதை.

"ஹஹ்ஹா! சிந்திக்கத் தெரியுமாவா? சிந்திக்கறது மட்டுமில்லை; சரியான யோசனையும், தீர்வையும் கூடச் சொல்லமுடியும் இவளால" எனச் சிலாகித்தார் கடவுள். திடீரென எதையோ பார்த்துவிட்டு, அவளது கன்னத்தைத் தொட்டது தேவதை. "அடடா! இப்படி அருமையாப் படைச்சிட்டு, இப்படி ஒரு ஓட்டையை வைச்சுட்டீங்களே! பாருங்க இங்கே! என்னமோ வழியுது. அளுவுக்கதிகமா எதையோ திணிச்சுட்டீங்களோ?" எனச் சற்றுக் கேலியுடன் கேட்டது தேவதை. "அது ஓட்டையல்ல, கண்ணீர்த் துளி!' என்றார் கடவுள்.  "அது எதுக்கு?" என்றது.

"தனது சந்தோஷம், வேதனை, சோகம், ஏமாற்றம், வலி, தனிமை, பெருமை அனைத்தையும் அவள் வெளிப்படுத்தும் ஒரே வழி இந்தக் கண்ணீர்த்துளியால் மட்டுமே! இதான் இதோட தனிச் சிறப்பு" என அளவிட முடியாத பெருமையுடன் கடவுள் ஆனந்தித்தார்.
"என்ன சொல்றதுன்னே தெரியலைங்க! உங்களைப் போல ஒரு திறமைசாலியை நான் பார்த்ததே இல்லை. எல்லா விஷயத்தையும் எவ்ளோ கச்சிதமா நினைச்சுப் பார்த்து இதைப் படைச்சிருக்கீங்க! தாய் தான் உங்க படைப்புகளிலேயே மிகச் சிறந்த ஒன்றுன்னு நிச்சயமா சொல்லுவேன்" என கடவுளை வணங்கியது தேவதை!
[அனைத்துத் தாய்மார்களுக்கும் சமர்ப்பணம்!]
['எர்மா பொம்பெக்' [Erma Bombeck] என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு மடலை தமிழாக்கித் தந்திருக்கிறேன்.
நன்றி:நண்பர் (by Magendran Natarajan on Saturday, May 7, 2011 at 9:௪௩ப்ம)

No comments:

Post a Comment