Search This Blog

Friday, May 6, 2011

ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். விடுதலை இல்லாத அடிமைகள். (சிறு கதை)

ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். விடுதலை இல்லாத அடிமைகள். (சிறு கதை)

by Keyem Dharmalingam on Wednesday, 04 May 2011 at 09:16
விடுதலை இல்லாத அடிமைகள். (சிறு கதை)

மனுஷனாக பிறந்தவன் எந்த வேலையையும் செய்யலாம், பாழாய்போன மேனேஜர் வேலையை தவிர, ஒரு வாயாடி பெண்டாட்டிக்கு புருஷனாக இருப்பது தான் மகா கஷ்டமென சந்திரன் சொல்லுவான். அது  அவன் அன்றாடம் படுகின்றபாட்டில் சொல்லுவது தான், மனைவி என்ற கஷ்டம் வீட்டுக்கு வந்தால் தான் கழுத்தை நெறிக்கும். அலுவலக பொறுப்பு என்ற கஷ்டம் கண்ணை மூடி தூங்கினால் கூட பசி நேரத்தில் பொறை வாங்கி போட்ட நாய் போல கூடவே தொடரும். கல்யாணமாகி பதிமூணு வருஷமாச்சு. பெரிய மேனேஜர் என்ற கித்தாப்பு, பொண்டாட்டி, பிள்ளைக்கு ஒரு குண்டுமணி தங்கம் கூட சேர்த்துவைக்க துப்புயில்லை என்று மனைவி வாய் வலிக்க திட்டினாலும் போப்பா ரிஜிஸ்டர் ஆபிஸில் பியூனா வேலை பார்க்கும் ஆறுமுகம் மாமா கூட அவர் பையனுக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கிறார் நீ பெரிய மேனேஜர் ஒரு சைக்கிள் கூட வங்கி தரகூடாதா என்று பையன் நாக்கை பிடுங்குகிற மாதிரி கேட்டாலும் கூட அவை எதுவுமே உரைக்கமாட்டேன் என்கிறது. சதாசர்வ காலமும் விரட்டிக் கொண்டே இருக்கும் மேல்திகாரிகளும் எவ்வளவுதான் உருட்டி மிரட்டினாலும், கெஞ்சி கூத்தாடினாலும் அசையவே மறுக்கும் பணியாளர்களும்... ச்சே! ரெண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் பிழைப்பு ஒரு பிழைப்பா?

ஆனால் இந்த கஷ்டம் யாருக்கு தெரிய போகிறது, போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், பெண்ணுடைய பெரியப்பாவோ, சித்தப்பாவோ தெரியல வாய் நிறைய பல்லாக சிரித்தார் விழுந்து விழுந்து உபசரித்தார் வருவோர் போவோரிடமெல்லாம் இவர் அந்த கம்பெனியில் பெரிய மேனஜர் இவர் வைத்துதான் அங்கு சட்டம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை பேரு பெத்த பேரு தாய்க்கு நீலு லேது என்ற தெலுங்கு பழமொழிதான் நினைவுக்கு வந்தது என் அலுவலக பியூன் ஒரு நாள் நம்ம மேனேஜர் இருக்கதே அது வெறும் சொரண கெட்ட ஜென்மம் எதையும் ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்கவே புரிஞ்சிக்காது இதுக்கெல்லாம் எவன் தான் மேனேஜர் போஸ்ட் போட்டானோ அவனை உதைக்கனும் என்று வசைமாரி பொழிந்து பேசிக் கொண்டிருந்ததையும் ஏனய்யா இந்த மேனேஜர் சுத்த வெளக்கெண்ணையா இருப்பானா தலபாடா அடிச்சிகிட்டாலும் ஆமை மாதிரியே நகர்ரான் யாரையும் வேலை வாங்கவே தெரியாதவானா இருக்கிறான். இவன்கிட்ட மாட்டிகிட்டு நமக்கு தான் தலைவலியா இருக்கு என்று ஜி.எம் விமர்சித்ததையும் வெளியில் சொல்லவா முடியும் ?

கர்பவதியாக இருப்பவள் கூட பத்து மாதத்தில் பிள்ளையை பெற்று சுமையை குறைத்து விடுவாள். ஆனால் எனது மேனேஜர் என்ற சுமை 58 வயது வரையில் குறையவே குறையாதா ? யாரை பார்த்தாலும் இன்னிக்கு மச்சினிச்சியை பெண் பார்க்க வர்றாங்க சீக்கிரமா போகனும் என்றால் உடனே மேனேஜரை பார் என்பது தான் பேச்சு. இன்னிக்கு ஓவர்டைம் செய்ய முடியாது என்று டைபிஸ்ட் சொன்னால் அதை என் என்னிடம் ஏன் சொல்கிறாய் மேனேஜரிடம் சொல்லு, என்னால் இந்த பில்லை பாஸ் பண்ண முடியாது வேண்டுமானால் மேனேஜரை சொல்ல சொல்லு, எனக்கு இன்கிரிமெண்ட் குறைவாக வந்திருக்கிறது என்றால் உடனே மேனேஜரை பார் இப்படி எதற்கெடுத்தாலும் என் தலையை உருட்டுவது முடியவே முடியாதா ?

தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிமாகி போய்விட்டது என்றால் இரண்டு, மூன்று இளநீர் வெட்டி அதில் ஏதாவது ஒன்றிற்குள் செத்து போன தண்ணிர் பாம்பை போட்டு வைத்து விடுவார்களாம், இளம் தேங்காய்க்கு ஆசைப்பட்ட குரங்கு அவரசமாக துவாரத்தில் கையைவிட்டு இன்னதென்று தெரியாமல் பாம்பை வெளியில் எடுக்குமாம் அது செத்து போன பாம்பு ஒன்றும் செய்யாது என்ற ஞானம் குரங்கிற்கு இருந்தால் அது எப்போதோ மனிதனுக்கு புத்தி சொல்ல ஆரமித்து இருக்குமே பாவம் கையில் இருக்கும் பாம்பை பார்த்து பயந்து அதை கீழே போடவும் தெரியாமல் மரத்திற்கு மரம் தாவுமாம். அதை பார்த்து பயப்படும் மற்ற குரங்குகள் தோட்டத்திற்கு பக்கமே சில காலம் வராதாம், ஏறக்குறைய நானும் அப்படி தான் மேனேஜர் என்ற பதவியை கீழே போடவும் தெம்பில்லை. தக்க வைத்து கொள்ளவும் தகுதியில்லை, இரண்டும் கெட்டான் பிழைப்பு பிழைக்க வேண்டியிருக்கிறது எல்லாம் தலையெழுத்து.

இப்படி நான் குழப்பி கொண்டு திரியும் போது தான் சந்திரன் ஒரு உண்மையான விஷயத்தை தோலுரித்து காட்டினான். இதேபார் நாகராஜ என்னை கேட்டால் உன் எம்.டி.க்கும் ஜி.எம் க்கும் சுத்தமாக அறிவு இல்லை என்றே சொல்லுவேன். உனக்கு மேனேஜர் பதவி கொடுத்ததில் இரண்டு வேலைகாரர்களை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஒருவன் போஸ்டிங் வந்ததற்கு எப்படி இரண்டு வேலை கெடும் ? ஒன்றுமே புரியாமல் அவனிடம் புரியும்படியாக சொல் என்றேன். இதோ பார் நீ ஹெட்கிளார்க்காக இருந்த போது அருமையாக வேலை செய்தாய். உன் மேஜையில் எந்த பைலையுமே தூங்கவிட்டது இல்லை. உன் சுறுசுறுப்பை பார்த்து தான் தடாலடியாக நிர்வாகம் உன்னை மேனேஜராக்கியது. இதனால் ஒரு நல்ல ஹெட்கிளார்க் இல்லாமல் போனார் உனக்கு வேலை செய்யதான் தெரியுமே தவிர வேலைவாங்க தெரியாது. இதனால் நிர்வாகத்திற்கு நல்ல மேனேஜரும் இல்லை இதனால்தான் உன் நிர்வாகத்திற்கு முளை இல்லாயென்றேன் என்று விளக்கினான். அவன் சொல்வது மிக சரியாகத்தான் பட்டது. ஹெட் கிளார்க் பதவியை விட்டுவிட்டு என்று மேனேஜர் ஆனேனோ அன்றே என் நிம்மதி போச்சு, சந்தோஷம் போச்சு, உறக்கம் கூட ரொம்ப தொலைவிற்கு எட்டி போச்சு.

சந்திரன் இது மட்டும் சொல்லவில்லை. மற்றவனின் முகசுழிப்பை சகித்து கொண்டு வேலை வாங்குவது கஷ்டம் தான், யாரோ செய்யாத வேலைக்கு நிர்வாகத்திடம் நாம் பேச்சு வாங்குவதும் சிரமாமான காரியம்தான், பெண்டாட்டி பிள்ளைகளை மறந்து சதா நேரமும் வேலை வேலையென மாரடிப்பது கடினம் தான்.    அவன் சொல்லுவதும் சரி தானே! உன் அடிமை புத்தி உனக்கு சந்தோஷம் என்றால் வேலையை விட்டுவிடு பணிவானவனை மாற்றலாம் அடிமையை மாற்றுவது கடினம். ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். அந்த போதையில் விழுந்தவன் இன்னும் மேலே போக விரும்புவானே தவிர கீழே எட்டி பார்க்க மாட்டான். நீ அன்னார்ந்து பார்த்தால் கண் கூசும் என்று அச்சப்படும் ஜாதி,ஆனாலும் நிறையபேர் இந்த மேனேஜர் பதவிக்காக ஏங்குகிறார்கள் ஏன் ? நிர்வாகத்திடம் முட்டி மோதி வாங்கத் துடிக்கிறார்களே ஏன் ? அதில் கஷ்டம் இருப்பது அவர்களுக்கு தெரியாது. என்பதாலா ? அப்படியல்ல அதிலுள்ள சிரமங்கள் நன்றாகவே அவர்களுக்கு தெரியும். ஆனாலும் ஒரே இடத்தில் தேங்கிகிடக்க பல மனங்கள் விரும்புவதில்லை. எழுந்து மேலே முன்னேற வேண்டுமென ஒவ்வொரு மனதும் துடிக்கிறது.  எதில் தான் கஷ்டமில்லை எங்கே தான் தோல்வியில்லை. ஆனாலும் அவைகளுக்காக பயந்து மூலையில் கிடந்தால் நான் மேனேஜர், எனக்கு கீழ் பத்துபேர் வேலை செய்கிறான் என்ற சந்தோஷம் கிடைக்குமா ? என் சகலபாடியை பார்த்து நிற்காதவர்கள் என்னை கண்டதும் மரியாதையாக எழுந்து நின்று கை குலுக்கும் போது கிடைக்கும் மகிழ்வை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.

  உன் அடிமை புத்தி உனக்கு சந்தோஷம் என்றால் வேலையை விட்டுவிடு, வீணாக புலம்பி நிர்வாகத்தை கெடுக்காதே என்றான். ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். அந்த போதையில் விழுந்தவன் இன்னும் மேலே போக விரும்புவானே தவிர கீழே எட்டி பார்க்க மாட்டான். நீ அன்னார்ந்து பார்த்தால் கண் கூசும் என்று அச்சப்படும் ஜாதி, பணிவானவனை மாற்றலாம் அடிமையை மாற்றுவது கடினம்.

அவன் சொல்லுவதும் சரிதானே!!!! நீங்களே சொல்லுங்கள்.

No comments:

Post a Comment