Search This Blog

Saturday, May 21, 2011

Black Money in India(இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட கறுப்புப் பணம் ரூ.30 ஆயிரம் கோடி!)

இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட கறுப்புப் பணம் ரூ.30 ஆயிரம் கோடி!

கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகள் மூலம் ரூபாய் 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா டெல்லியில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற, கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மார்ச் வரையான காலத்தில் மொத்தம் வசூலான வருமான வரித் தொகை ரூ. 74 ஆயிரம் கோடி. இத்துடன் ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணமும் சேரும். இந்த நிதி ஆண்டில் மே 15ஆம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம்.

இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் இவ்விதம் கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார். அதிக வருமானம் ஈட்டும் அதிகாரிகள் அனைவருமே கண்காணிப்பு வளையத்திற்குள் வருகின்றனர் என்றும் ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், எவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்வது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து கறுப்புப் பணம் சார்ந்த விஷயங்களை பெறுவதில் இந்தியா அதிக தீவிரம் காட்டுவதாகவும் இப்போது இதுபோன்ற விவரங்களை அளிப்பது தொடர்பான நடைமுறைகள் மாறி வருவதாகவும் குறிப்பிட்டார். பஹாமஸ், நெர்முடா, ஐசில் ஆஃப் மேன் போன்ற வரி விதிக்கப்படாத 14 நாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை அமலாக்கப் பிரிவுக்குத் தருவதில்லை என்றும் வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்கினால் இதற்கு வழி கிடைக்கும் என்றும் சுதிர் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment