Search This Blog

Thursday, April 28, 2011

இன்னும் நேரம் இருக்கிறது - Sujasaras


நவம்பர் 30 2008(1)
அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக வர்த்தக நெருக்கடியில் இருப்பதாய் அமெரிக்க தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு அறிக்கை வெளியிட ஆயத்தமானது.

நவம்பர் 30 2001(1)
இதே தினம்தான் நான் பார்த்து கொண்டிருந்த கணிப்பொறி வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். வேலைக்கு சேர்ந்து சரியாக மூன்றாவது மாதம்.

செப்டம்பர் 11 2001(1)
இன்னுமொரு வர்த்தக நெருக்கடியை சிலர் துவக்கி வைத்த தினம்.

செப்டம்பர் 1 2001(1)
புதிய வேலை. நான் சிரமப்பட்டு படித்த படிப்பிற்கும் நான் பார்த்த பகுதி நேர வேலைகளுக்கும் பதில் கிடைத்த தினம். என் மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை நான் பகிர்ந்து கொண்ட தினம். இதுவரை நான் படிப்பிற்காக வாங்கிய கடன் எல்லாம் இனி காற்றாய் கரைந்து போகும் என கனவு கண்ட தினம்.

செப்டம்பர் 1 1999.
இன்றுதான் என் முதுகலை படிப்பு தொடங்கியது. ஒருபுறம் பிரிவு வாட்ட மறுபுறம் ஆயிரமாயிரம் கனவுகளை சுமந்து என் அமெரிக்க கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். வெவ்வேறு நாட்டினர். முற்றிலும் புதிய முகங்கள். வேறு மாதிரியான உலகம். ஆரம்பகால நட்பிற்கு இந்திய மாணவர்கள்.எல்லா கஷ்டங்களையும் போக்க ஐந்தாறு கடன் அட்டைகள்.

அமெரிக்க படிப்பிலே பாரட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் - பகுதி நேர வேலை வாய்ப்பு. குறிப்பாக என்னை போன்ற ஏழைகளுக்கு. கல்லூரி வளாகத்திலேயே பலருக்கும் வேலை கிடைக்கும். கிடைக்காத சிலர் வெளியில் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த சிலரில் ஒருவர் ஆனதால் எனக்கு முதலில் கிடைத்த வேலை கழிவறை சுத்தம் செய்தல். மகிழ்ச்சியாய் செய்தேன். நான் வாங்கும் முதல் சம்பளம்.

பகுதி நேர வேலை வாய்ப்புகள் என் இந்திய வீட்டின் பசியையும் அவ்வபோது அடைத்தது. காசு கொடுத்து உதவிய அக்கம் பக்கத்தினருக்கும் பதில் சொல்லியது.

பகுதி நேர வேலையே இப்படியென்றால் இன்னும் இரண்டு வருடங்களில். வர போகும் வசதியை நினைத்து நினைத்து எல்லா எண்ணங்களையும் சேர்த்துவைத்தேன்.

நன்றாய் படித்தேன். படித்தவுடன் வேலையும் கிடைத்தது. கல்லூரி விட்டு வெளியே வந்த உடனேயே எங்களை கொத்திசென்றது கணிப்பொறி வேலைகள்.

செப்டம்பர் 1 2001(2)
நான் வேலைக்கு சென்ற நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டது. நல்ல விதமான மேலதிகாரியும் அமைந்தார். நான் இருந்த ஊரில் அரசு போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காரணத்தினால் ஒரு வாகனம் வாங்க வேண்டியது கட்டாயமானது. என் மேலதிகாரியின் வற்புறுத்தலில் ஒரு புதிய வாகனமும் வாங்கினேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் கண்ட கனவுகள் நினைவுகளாய் மாற துவங்கியது.

மதிய உணவை பெரும்பாலும் என் அலுவலக சிற்றுண்டியில்தான் அருந்தினேன். அதற்கு இரு காரணம். 1. இங்கு அமெரிக்க உணவுகள் மட்டுமே சமைக்கப்படும். இது வரை நான் அமெரிக்க உணவை ஓரிரு கல்லூரி விருந்துகளை தவிர்த்து உண்டது இல்லை. ஆகையால் சனி, ஞாயிறு தவிற எல்லா நாட்களும் இங்குதான். 2. அங்குதான் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார் - சாம் - கறுப்பின நண்பர் - அங்கு அமெரிக்க உணவு வகைகளை சமையல் செய்பவர். அவருக்கு இந்தியா பற்றி தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம். சில நேரம் எனக்கு தெரியாத இந்தியா விசயங்களை கூட சொல்வார்.

செப்டம்பர் 11 2001(2)
உலகமே ஸ்தம்பித தினம். எங்கள் நிறுவனம் பெரிதாய் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
நான் சாமிடம் தினம் கேட்கும் விஷயம், எனக்காக ஒரு முறை அவர் சாதம் சமைத்து தர வேண்டும் என்பதுதான். அங்கு அமெரிக்க உணவு வகைகள் மட்டுமே செய்வதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. எல்லா நிறுவன பங்கு தொகைகளும் பாதாளத்திற்கு போயின. எங்கள் நிறுவனத்திலும் மாறுதல்கள் உண்டாயின.

நவம்பர் 30 2001(2)
காலை வந்த உடனே என் மேலதிகாரியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.

கடைசியாய் ஒரு முறை சாமை பார்க்க வந்தேன். சாமிற்கு விஷயம் தெரிந்திருந்தது. எனக்காக சாதம் செய்திருந்தார். என்னால்தான் உணவருந்த முடியவில்லை.

என்ன செய்வேன்???? என் நிறுவனமே இப்படி என்றால் இனி எந்த நிறுவனம் என்னை போன்ற பலரை வேலைக்கு அமர்த்தும். பகுதி நேர வேலை கூட இனி கிடைக்குமா என்பது சந்தேகம்.

வந்த மூன்று மாத சம்பளமும் என் கடன் அட்டைகளை அடைக்கவே சரியாய் போனது.

எப்படி என் இளங்கலை பட்ட கடன் அடிப்பேன். முதுகளை..? வந்த நாள் முதல் வீட்டிற்கு பணம் கொடுத்தேனே. இப்பொழுது எங்கே போவேன்..? எப்படி அவர்களிடத்தில் புரிய வைப்பேன். எனை நம்பி என் தங்கை திருமணம்.

மயக்கம் வந்தாற்போல் இருந்தது. சாம் என் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். சாமை போய் சமையலை கவனிக்குமாறு சொன்னேன். இன்னும் நேரம் இருக்கிறது என்றார். காலையிலே வேலை போனதால் நாந்தான் சீக்கிரம் வந்துள்ளேன்.
\"இன்னும் நேரம் இருக்கிறது.\"

\"சாம்.....எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா..?\"
\"என்ன வேண்டும்? கேள்...\"

\"உங்கள் அடுக்களையில் என்னை ஒரு அரை மணி நேரம் அனுமதிப்பீரா..?\"
\"ஏன்.? உனக்கு என்ன வேண்டும்...? நான் செய்கிறேன்..\"

\"இல்லை. என்னை அனுமதிப்பீரா....ஒரு அரை மணி நேரத்தில் வருகிறேன்.\"
சாம் என்னை கூப்பிட கூப்பிட அங்கிருந்து கிளம்பினேன்.

திரும்பி வந்த நான் நேராக சாமின் அடுக்களையில் நுழைந்தேன். அடுத்த இரண்டு தினங்களுக்காக எனக்காக ஊற வைத்திருந்த சுண்டலை கையோடு எடுத்து வந்தேன். கூடவே பூண்டு, சீரகம், மஞ்சள் பொடி, கொஞ்சம் கொத்தமல்லி, இஞ்சி, கரம் மசாலா மற்றும் சில பச்சை மிளகாய்கள்.

\"என்ன செய்கிறாய் நீ..? என்ன இதெல்லாம்..\"
\"சாம். கவலைப்படதீர்கள். எனக்கான இந்த உதவியை மட்டும் செய்யுங்கள்.\"

\"எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அனால் நீ என்ன செய்கிறாய் என்று சொன்னால் நன்றாய் இருக்கும்\"
\"சொல்கிறேன். இந்த சுண்டலை கொஞ்சம் வேக வைப்பீர்களா..?\"

நான் வெங்காயம், தக்காளி, மற்றும் பூண்டு நறுக்கி தனியாக வைத்தேன். இன்னுமொரு சிறிய கூஜாவில் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்தேன். இன்னொரு கூஜாவில் இஞ்சி நறுக்கி வைத்தேன்.

20 நிமிடத்தில் சாம் சுண்டல் வேக வைத்து கொடுத்தார். ஒரு பாத்திரம் வாங்கி முதலில் வெங்காயம், பூண்டு எண்ணையில் போட்டு வதக்கினேன். வெங்காயத்தின் நிறம் மாறிய பின் கொத்தமல்லி, சீரகம் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்தேன். இரண்டொரு நொடியில் தக்காளி சேர்த்தேன்.

தக்காளி கொஞ்சம் நிறம் மாறிய பின் வேக வைத்த சுண்டலை சேர்த்தேன். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு, கரம் மசாலா, கொஞ்சம் எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் சமைத்தேன்.

\"சாம்....கொஞ்சம் ருசி பாருங்கள். காரம் தேவைபட்டால் இந்த பச்சை மிளகாயையும், இஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள்...\"
சாம் ருசி பார்த்தார். அவர் கண்களிலேயே சுவை தெரிந்தது.

\"எனக்காகவா இவ்வளவும் செய்தாய்..?\"
\"சாம்...நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டேனே..\"
\"?!\"

இந்த உணவை மற்ற உணவோடு பரிமாற ஒரு வழியாக சாமை சம்மதிக்க வைத்தேன். எனக்காக அவர் சமைத்த சாதமும் அங்கு வைக்கப்பட்டது.

\"சாம். எல்லோரும் சாப்பிட வர இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது.?\"
\"ஏன்..?\"

கீழே கிடந்த சில அட்டைகள் எடுத்தேன். அதற்கு மேல் வெள்ளை தாள் ஒட்டி \"இன்றைய சிறப்பு உணவு - இந்திய சன்னா மசாலா\" என எழுதி வைத்தேன்.
நிறைய கேள்விகள் சாமிடம். முக்கியமான கேள்வி - இது தினம் கிடைக்குமா.?

சாம் என்னை உணவக நிறுவனரிடம் அழைத்து சென்றார். எத்தனை தினங்களுக்கு இந்த வேலை உனக்கு வேண்டும் என்றார்.

\"நான் இங்கேயே இன்னொரு உணவகம் ஆரம்பிக்கும்வரை. கவலை கொள்ளாதீர்கள். இந்த நிதி நெருக்கடி முடிந்து இங்கே நிறைய இந்தியர்கள் வருவார்கள். இன்னொரு நிதி நெருக்கடி வரும்போது கூட நம்மால் சமாளிக்க முடியும்..\"

நான் மாணவனாக விடுபட்டு 3 மாதங்களே ஆன காரணத்தால் அப்பொழுது விசா பிரச்சனை ஏற்படவில்லை. ஒரு வருடத்தில் அவரே எனக்கான விசா ஏற்பாடு செய்தார்.

எட்டு வருடங்கள். எல்லா கடனையும் அடைத்து எனக்கான ஒரு வீடும் இந்தியாவில் வாங்கிவிட்டேன். இடையே என் தங்கையின் திருமணமும் என் திருமணமும் முடிந்து நானும் என் மனைவியும் எங்கள் புதிய உணவகத்தை பார்த்துகொள்கிறோம். என் அனைத்து மகிழ்ச்சியான தருணத்திலும் சாம் என்னுடன் சேர்ந்து இருந்தார். என் திருமணம் போது அவருக்கு என்னுடன் இந்தியா வந்ததில் பெரு மகிழ்ச்சி. தன் கடைசி காலங்களை அங்குதான் கழிப்பேன் என்று உறுதி பூண்டார். அவர் இந்தியாவில்தான் இறைவனை உணர்ந்தாராம்.

நவம்பர் 30 2008(2)
இந்த முறை ஏற்பட்ட வர்த்தக நெருக்கடியில் எங்கள் நிறுவனமே மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் பழைய உணவக நிறுவனரிடம்தான் சாம் இன்று வரை வேலை செய்தார்.

நான் போகும்போது சாம் யாருடனோ பேசிகொண்டிருந்தார். என்னை பார்த்ததும்,\"இவனும் உன்னை போல்தான். வந்த 3 மாதங்களில் வேலை போனது.\"

\"சாம்.....கிளம்புவோமா...?\" என்று கேட்டுக்கொண்டே அவனை உற்று நோக்கினேன்.
\"இன்னும் நேரம் இருக்கிறது\" என்றார்.
அவன் தனக்குள் \"இன்னும் நேரம் இருக்கிறது\" என்று முனுமுனுத்தான்.

No comments:

Post a Comment